அஹ்லுல் பைத்
சிறப்புக்களும் உரிமைகளும்
கலாநிதி
அமீன் பின் அப்தில்லாஹ்
அஷ்ஷகாவீ
தமிழில்
எம். அஹ்மத் (அப்பாஸி)
மீள்பரிசீலனை
எம். ஜே. எம். ரிஸ்மி (அப்பாஸி, M. A)
வெளியீடு
இஸ்லாமிய அழைப்பு நிலையம்
ரியாத் – ஸவூதி அரேபியா
فضائل أهل البيت وحقوقهم
إعداد
الدكتور / أمين بن عبد الله الشقاوي
ترجمة
أحمد بن محمد
مراجعة
محمد رزمي محمد جنيد
الناشر
المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالربوة
الرياض
المملكة العربية السعودية
بسم الله الرحمن الرحيم
புகழனைத்தும் ஏக வல்லவன் அல்லாஹ்வுக்கே. சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், ஈடிணையற்றவன் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன்.
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு அல்குர்ஆன், ஸுன்னாவில் கூறப்பட்டுள்ள உயர்ந்த அந்தஸ்த்துக்களும் பல சிறப்புக்களும் உள்ளன. அவர்களைக் கவனத்திலெடுக்குமாறு நபிகளார் உபதேசித்துள்ளார்கள். ''என்னுடைய குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன், என்னுடைய குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன், என்னுடைய குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன்''.([1]) அஷ்ஷேஹ் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறினார்கள் : 'அதாவது நீங்கள் அல்லாஹ்வை நினைவில் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் உரிமையை வீணடித்தால் அவனுடைய வேதனையையும் பழிவாங்களையும் அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டால் அவனுடைய கருணையையும் நற்கூலியையும் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள். அவர்கள் நபியின் உறவுக்காரர்கள் என்பதாலும் அல்லாஹ்வை விசுவாசங் கொண்டதாலும் அவர்களை நாம் நேசிக்கிறோம். அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், நபியின் உறவுக்காரர்களாக இருந்தாலும் நாம் அவர்களை நேசிக்கமாட்டோம். நபிகளாரின் சிற்றப்பா அபூலஹபை எவ்விதத்திலும் நாம் நேசிக்கலாகாது. மாறாக அல்லாஹ்வை நிராகரித்ததாலும் நபியவர்களை நோவினைப் படுத்தியதாலும் நாம் அவனை வெறுப்பது அவசியமாகும்'.([2])
'அஹ்லுல் பைத்' என்போர் யார் ?
'அஹ்லுல் பைத்' என்போர் யார் என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு பட்டுள்ளனர். யாருக்கெல்லாம் ஸகாத் பெற முடியாதோ அவர்களே அஹ்லுல் பைத் என்பதுதான் மிக வலுவான கருத்தாகும். நான்கு மத்ஹப்களினதும் பெரும்பான்மை அறிஞர்களின் கருத்து இதுவாகும். இக்கருத்தையே அறிஞர்களான இப்னு ஹஸ்ம்(ரஹ்), இப்னு தைமியா(ரஹ்), இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் வலுப்படுத்தியுள்ளனர். அவர்கள் எக்குடும்பங்களென வரையறுப்பதிலும் பல கருத்துக்கள் உள்ளன. அவற்றில் இரு கருத்துக்கள் பிரபலமானவை :
1. அவர்கள் ஹாஷிம் மற்றும் முத்தலிப் ஆகியோரின் சந்ததிகளாவர் என்பது அறிஞர்களான இப்னு ஹஸ்ம்(ரஹ்), இப்னு ஹஜர்(ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.
2. அவர்கள் ஹாஷிமின் சந்ததிகளாவர் என்பது அறிஞர்களான அபூஹனீபா(ரஹ்), மாலிக்(ரஹ்), இப்னு தைமியா(ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.
வலுவான கருத்தின்படி ஹாஷிமின் சந்ததிகள் பின்வருவோராகும் :
· அப்பாஸ் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்.
· அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினர்.
· ஜஃபர் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்.
· அகீல் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்.
· ஹாரிஸ் இப்னு அப்தில் முத்தலிபின் குடும்பத்தினர்.
· நபியவர்களின் மனைவியரும் அஹ்லுல் பைத்தில் அடங்குவர்.
'அஹ்லுல் பைத்' பற்றி வந்துள்ள சில ஆதாரங்கள்:
1. "உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தைக் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள். அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்." (அஹ்ஸாப் 33,34 )
இவ்வசனம் அவர்களும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் கண்டிப்பாக அடங்குவார்கள் என்பதை அறிவிக்கின்றது. ஏனெனில் இதற்கு முன்னும் பின்னுமுள்ள வசனங்கள் அவர்களை விழித்தே பேசுகின்றன.([3])
2. தாபிஈன்களில் ஒருவரான காலித் இப்னு ஸஈத் என்பவர் அன்னை ஆஇஷா (ரலி) அவர்களுக்கு ஸகாத் பொருளிலிருந்து ஒரு மாட்டை அனுப்பினார்கள். "நாங்கள் நபிகளாரின் குடும்பத்தினர். எங்களுக்கு ஸகாத் ஹலாலாக மாட்டாது" என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.([4])
3. மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியையும் நபியவர்களின் மனைவியரும் அஹ்லுல் பைத்தில் அடங்குவர் என்பதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர் :
"மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா? எனக் கேட்டார்கள்".([5]) மற்றோர் அறிவிப்பில் "எங்களுக்கு ஸகாத் ஹலாலாக மாட்டாது" என்று இடம்பெற்றுள்ளது.([6])
4. ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'கும்மு'([7]) எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, "இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்'' என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.
பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்'' என்று (மூன்று முறை) கூறினார்கள்.
அப்போது ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார் யார்? நபியவர்களின் துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "நபியவர்களின் துணைவியரும் அவர்களின் குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்குத் தர்மம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்'' என்று கூறினார்கள்.
அதற்கு ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் "அவர்கள் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத் தாரும், அகீல் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாருமே (நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)'' என்று பதிலளித்தார்கள்.
ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "தர்மம் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளதா?'' என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "ஆம்'' என்று பதிலளித்தார்கள்.([8])
· அதேபோன்று நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் அவர்களால் உரிமை இடப்பட்டவர்களும் அடங்குவார்கள்.
5. அபூராபிஃ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : பனூ மக்ஃஸூம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நபி (ஸல்) அவர்கள் ஸகாத் சேகரிக்க அனுப்பினார்கள். அந்நபர் அபூராபிஃ இடம் 'அந்த ஸகாத்திலிருந்து உங்களுக்கும் கிடைக்கும் பொருட்டு நீங்களும் என்னுடன் பயணியுங்கள்' என்று கூறினார். 'இல்லை, நான் நபியவர்களிடம் சென்று கேட்கும் வரை நான் வரமாட்டேன்' என்று அபூராபிஃ கூறிவிட்டு நபியவர்களிடம் சென்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "எங்களுக்கு ஸகாத் ஹலாலாக மாட்டாது, ஒரு சமூகத்திடமிருந்து உரிமை இடப்பட்டவர்களும் அச்சமூகத்தைச் சார்ந்தவர்களே" என்று கூறினார்கள்.([9])
6. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த ஃபய்உ )போரின்றி கிடைக்கும்( செல்வத்திலிருந்து தமக்கு நபி (ஸல்) அவர்களிடமிருந்து வரவேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா(ரலி) ஆளனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற நிலத்தையும் "ஃபதக்" பிரதேசத்திலிருந்த நிலத்தையும் கைபரில் கிடைத்த ஐந்திலொரு பகுதி நிதியில் மீதமானதையும் அவர் கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான்" என்று சொன்னார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இந்தச் செல்வத்திலிருந்து தான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து தான். அதில் தங்கள் உணவுச் செலவை விட அதிகமாக எடுத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை என்றும் கூறினார்கள்.([10])
இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திற்குத் தனிச்சிறப்புக்கள் பல உள்ளன. ஸகாத் பெற முடியாதென்பதும், நபி (ஸல்) அவர்களின் சொத்துகளுக்கு வாரிசாக வரமுடியாது என்பதும் அச்சிறப்புக்களில் உள்ளவையாகும்.([11])
7. அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக் காட்டி) "இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் ஸகாத் பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (இந்நபிமொழியின் தொடரில்)….. "ஸகாத் பொருள் முஹம்மதுக்கும் முஹம்மதின் குடும்பத்தாருக்கும் ஹலாலாக மாட்டாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்'' என்று கூறினார்கள்([12])
ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) கூறுகின்றார்கள் : அப்பாஸ் (ரலி), ஹாரிஸ் இப்னு அப்தில் முத்தலிப் ஆகியோரின் சந்ததியினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரே. அவர்களுக்கும் ஸகாத் ஹலாலாக மாட்டாது என்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
முத்தலிபின் சந்ததியினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரே என்று கூறுவோர் பின்வரும் நபிமொழியை மேற்கோள் காட்டுகின்றனர் :
8. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! முத்தலிபின் சந்ததியினர்க்கு (போரில் கிடைக்கும்) ஐந்திலொரு பகுதி நிதியிலிருந்து கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டு விட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவுமுறை உடையவர்கள் தாமே? என்று கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முத்தலிபின் சந்ததியினரும் ஹாஷிமின் சந்ததியினரும் ஒருவர் தாம்" என்று கூறினார்கள். பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி (ஸல்) அவர்கள் ஐந்திலொரு பகுதி நிதியிலிருந்து பங்கு தரவில்லை என்று ஜுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ([13])
மற்றோர் அறிவிப்பில் : "நாங்களும் முத்தலிபின் சந்ததியினரும் அறியாமைக் காலத்திலோ இஸ்லாத்திலோ பிரிய மாட்டோம். நாங்களும் அவர்களும் ஒருவர் தாம்" என்று கூறிவிட்டு தனது விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். ([14])
அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள் :
அஹ்லுல் பைத் பற்றி பல விதமான சிறப்புக்கள் அல்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன.
அல்குர்ஆனிலிருந்து :
1. இறைவன் கூறுகின்றான் : இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அஹ்ஸாப் 33).
ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) கூறுகின்றார்கள் : நபியவர்களின் குடும்பத்தை விட்டு அசுத்தத்தை நீக்கவும், அவர்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே நாடுகிறான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்திய போது நபியவர்கள் தனது குடும்பத்தில் மிக நெருக்கமான, மிகவும் சிறப்புக்குரியவர்களை அழைத்தார்கள். அவர்கள் யாரெனில், அலீ (ரலி), பாத்திமா (ரலி), சுவன வாலிபர்களின் இரு தலைவர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோராவர். அல்லாஹ் அவர்களுக்கு பரிசுத்தப்படுத்தல், நபியவர்களின் பரிபூரண பிரார்த்தனை ஆகிய இரண்டையும் ஒருசேரக் கொடுத்துள்ளான். இதிலிருந்து, அவர்களை விட்டு அசுத்தத்தை நீக்குவதும், அவர்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவதும், அவர்களுடைய எவ்வித முயற்சியுமின்றி, அல்லாஹ் அவர்களுக்கு பரிபூரணமாக வழங்க விரும்பிய அருட்கொடையாகவும், அவனிடமிருந்து வந்த கருணை மற்றும் சிறப்பாகவும் உள்ளதென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.([15])
(ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்)) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள பின்வரும் நபிமொழியையே சுட்டிக் காட்டுகின்றார்கள் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கறுப்பு நிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது (அவர்களுடைய பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை (தமது போர்வைக்குள்) நுழைத்துக் கொண்டார்கள்; பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களும் (போர்வைக்குள்) நபி (ஸல்) அவர்களுடன் நுழைந்து கொண்டார்கள்; பிறகு (மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தபோது, அவர்களையும் (போர்வைக்குள்) நுழைத்துக் கொண்டார்கள். பிறகு (மருமகன்) அலீ (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களையும் போர்வைக்குள் நுழைத்துக்கொண்டார்கள். பிறகு, "இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத் தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்'' எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்."([16]) மேலும் இப்னு தைமியா(ரஹ்) கூறுகின்றார்கள் : மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகளாகிய ஸகாத்தை அவர்களுக்குத் தடைசெய்திருப்பதும் அவர்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவதில் உள்ளதாயிருக்கலாம்.([17])
2. இறைவன் கூறுகின்றான் : உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்'' எனக் கூறுவீராக! (ஆலு இம்ரான் 61). மேற்கண்ட வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, "இறைவா, இவர்கள்தான் என்னுடைய குடும்பத்தினர் என்றார்கள்".([18])
மக்கா வெற்றிக்குப்பின் ஹிஜ்ரி 9 அல்லது 10ல் நஜ்ரான் பகுதியிலிருந்து ஒரு கூட்டம் வந்த போதே இந்த சாபமிட்டுக் கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேற்கண்ட நால்வரையும் ஒரு போர்வைக்குள் நபி (ஸல்) அவர்கள் போர்த்திய நபிமொழியைப் போன்றே இவ்வசனமும் அவர்களுக்கிடையே உள்ள நெருங்கிய தொடர்பை வெளிக்காட்டுகின்றது. ([19])
சாபமிட்டுக் கொள்வது பற்றிய நபிமொழியை சில அறிஞர்கள் அஹ்லுல் பைத்தினரின் சிறப்புக்களில் சேர்த்துள்ளனர். மேற்கண்ட நபிமொழியைப் பற்றி ஸமஹ்ஷரீ என்ற அறிஞர் போர்வைக்குள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தவர்களின் சிறப்பிற்கு இதனைவிட வலுவான அதாரம் கிடையாது. ([20])
3. இறைவன் கூறுகின்றான் : "இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்'' என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக!. நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான். (அஹ்ஸாப் 28,29).
மேற்கண்ட வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. அவர்களுக்கு இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் அல்லது அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் தெரிவு செய்யும்படி விருப்பம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் தேர்வு செய்தார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.
4. பின்வரும் வசனமும் அம்மனைவியரின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. இறைவன் கூறுகின்றான் : நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். (அஹ்ஸாப் 06). அவர்களை முஃமின்களுக்கு அன்னையரென வர்ணித்துள்ளான்.